ஆசிய கிண்ண சமர் இன்று ஆரம்பம்: முதலில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 

போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள சர்வதேச மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து போட்டிகளுமே பகல் இரவு போட்டிகள். முதல் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 

இப்போட்டி ஃபாதுல்லாவில் நடைபெறுகிறது. ஆசிய கிண்ணத்துக்கான இறுதி போட்டியானது மார்ச் 8 ஆம் திகதி அன்று மிர்பூரில் நடைபெறும். 

இந்த போட்டிக்கான ஏற்பாடு குறித்து ஆசிய கிண்ண ஏற்பாட்டுக் குழு தலைவரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவருமான அமினுல் இஸ்லாம் புல்புல் கூறும்போது, இந்த போட்டிகள் அனைத்துமே ஃபதுல்லா மற்றும் மிர்பூரில் இருக்கின்ற சர்வதேச மைதானங்களில் இடம்பெறுகின்றன. 

போட்டி நடைபெறும் அரங்குகளை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை அனைத்தையும் செய்துள்ளோம். வீரர்களின் பாதுகாப்பு, பொது மக்களின் பாதுகாப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளோம். அரசாங்கமும் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்று கூறினார். 

இதற்கிடையே, காயம் காரணமாக இந்திய அணியின் தலைவர் தோனி போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி தலைவர் பதவியை ஏற்பார் என கூறப்பட்டுள்ளது. அதே போல பங்களாதேஷ் அணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் போது தன்னை ஆலோசிக்கவில்லை என பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.