இங்கிலாந்தில் பறக்கவிடப்படும் சீன விளக்குகளால் தீ விபத்து

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் ஸ்மெத்விக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் மறுசுழற்சிக்காக வைத்திருந்த 1,00,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமாகின. 

ஜேபிளாஸ் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட இந்த தீயினால் ஏற்பட்ட புகை சுமார் 6000 அடி உயரத்திற்கு கிளம்பியது. 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

அவர்களில் மூன்று பேர் தீக்காயத்தினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட நஷ்டம் 6 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார் பறக்கவிடப்படும் சீன விளக்குகளால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். 

தீயணைப்பு துறையின் தலைவர் விஜ் ரண்டேனியா இதுகுறித்து கூறும்போது, இந்த பகுதியில் தற்போது நடந்திருக்கும் தீ விபத்து இந்த ஆண்டில் நடைபெறும் பதினைந்தாவது விபத்து என்று கூறிய அவர், சீன விளக்கு அந்த பகுதியில் விழுந்த எட்டாவது நிமிடத்தில் தீப்பிடித்துள்ளது. 

இத்தகைய விளக்குகளை பறக்கவிடுவது ஏற்கனவே தடை செய்யப்படவேண்டும் என்று பிரசாரம் செய்யப்பட்ட போதிலும், இன்னும் அத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். 

இத்தகைய விளக்குகள் பறக்கவிடுவதை நிறுத்த வேண்டும் என்று வெண்ட் மிட்லாண்ட் பகுதி மக்களுக்கும், சமூக தலைவர்களுக்கும் தீயணைப்பு துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

அதேபோல் இத்தகைய விளக்குகளுக்கு அனுமதி அளிக்கும் குழுக்களையும் இதுகுறித்து பரிசீலனை செய்யுமாறும் தீயணைப்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

தொழிற்பேட்டையினுள் இருந்த நிறுவனத்தின் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அனல் முற்றிலும் தணிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம். 

எனவே, தொழிற்பேட்டை அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும், தொழிற்பேட்டை அருகில் உள்ள டார்ட் மவுத் ரோடு, ஹல்போர்ட்ஸ் லேன் மற்றும் பிராஸ் ஹவுஸ் லேன் ஆகிய பகுதிகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 

அருகிலிருந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது