இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என்று சகலதுறை ஆட்டக்காரர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத
நிலையில் அவர் மேலும் கூறியதாவது கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது வேறு விடயம். ஆனால் இப்போது என்னால் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்பது எனக்குத் தெரியும்.
அந்தக் கனவை நனவாக்க முடியும் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இனிமேல் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று சிலர் கூறினர்.
ஆனால் என்னால் மீண்டும் விளையாட முடியும் என்று எனக்கு அப்போது தெரியும். சிலர் என் கதை முடிந்தது என்று விமர்சித்த போது கூட முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய பின்னர் 2008 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடரில் மீண்டும் விளையாடும் வாய்ப்பைப் பெற்றேன்.
தற்போது நான் எனது இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்,விரைவிலேயோ அல்லது கொஞ்சம் தாமதமாகவோ அணிக்கு திரும்ப முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன். நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை ஒரேயொருவரால் தான் தடுக்க முடியும். அது வேறு யாருமல்ல நான்தான். இலக்கை நோக்கி நான் செல்லாவிட்டால் தான், விளையாட முடியாமல் போகும் என்றார்.