இந்தோனேசியாவில் விமானம் மீது மோதிய மாடு

இந்தோனேசியாவில் ஓடுபாதையில் இருந்த மாடு மீது மோதியதால் விமானம் ஒன்று நிலை தடுமாறி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தோனேசிய தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது. 

விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில் இறங்கும் வேளையில் அருகாமையில் உள்ள புல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த மாடுகளில் மூன்று மாடுகள் ஓடுபாதையின் குறுக்கே வந்தன. 

இதனால் அச்சமடைந்த விமானி அடுத்து என்ன செய்வது என யோசிக்கும் முன், விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் ஒரு மாடின் மீது பயங்கரமாக மோதியது. 

விமானம் மோதிய மாடு பல அடி தூரம் தள்ளிப்போய் விழுந்தது. மாட்டின் மீது மோதிய வேகத்தில் நிலை தடுமாறிய விமானம், ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் பாய்ந்தது. 

இச்சம்பவத்தில் விமானத்தின் சிறிய பகுதி சேதமடைந்தது. ஆனால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

110 பயணிகளும், 7 விமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

ஓடுபாதையின் குறுக்கே விபத்துக்குள்ளான விமானம் விழுந்து கிடந்ததால் அங்கிருந்து புறப்படும் இதர விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

விமானம் புல்தரையிலிருந்து அகற்றப்பட்ட பின் பிற விமானங்கள் இயக்கப்பட்டன.