ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனிப்பட்ட நாடொன்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதோ, விவாதம் நடத்துவதோ பேரவையின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. இலங்கைக்கு எதிராக அத்தகைய நடவடிக்கைகள் எதனையும் இச்சபை உள்ளீர்க்குமானால் அது இரட்டைத்தனமான நிலைப்பாடாகவே அமையுமென மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் விசேட பிரதிநிதியும் பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சருமான மகிந்த சமரசிங்க வலியுறுத்தி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் சமரசிங்க நேற்று உரையாற்றுகையில், சமாதானத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துவதில் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக தெரிவித்தார்.
அவர் தமது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சகல மக்களினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அதிகபட்ச நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்து வருகிறது.
மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள் ஒருங்கிணைப்பு, நல்லிணக்க நடவடிக்கைகள் என சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.
சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதில்லை. வட மாகாண
சபைக்கான தேர்தல் இந்த வருடம் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்குள் இத்தகைய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ள போதும், மேற்கு நாடுகள் சிலவற்றில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மீதமாக இருப்போரும் அவர்களின் ஆதரவாளர்களும் இலங்கையின் சமாதானம், நல்லிணக்க நடவடிக்கைகளை புறந்தள்ளிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் சிக்கியிருப்பது கவலைக்குரியதாகும். தவறான தகவல்கள், அழுத்தம் கொடுக்கும் தந்திரோபாயங்களின் விளைவாக இலங்கையானது பக்கச்சார்பாகவும் சமத்துவமற்ற முறையிலும் நடத்தப்படும் நிலைமையும் உருவாகியிருக்கிறது.
இலங்கையை தண்டிப்பதற்காக 2012 மார்ச் 22 இல் பேரவையின் 19 ஆவது அமர்வில் இலங்கைக்கெதிரான தீர்மானமொன்று உள்ளீர்க்கப்பட்டது. அந்தத் தீர்மானம் முற்றிலும் தேவையற்றதும் வேண்டப்படாததும் நேர்மையற்றதுமாகும். யாவற்றுக்கும் மேலாக அத்தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மான நகல் வரைபு குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் அந்தத் தீர்மானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பேரவையினால் இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக நியாயமற்றதும் கொள்கையற்றதும் பக்கச்சார்பானதுமான எந்தவொரு தீர்மானமும் உள்வாங்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கின்றோம்.
உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்திற்கு தலையாய பொறுப்பு உள்ளது என்பது எமது நிலைப்பாடாகும். இந்த மாதிரியான விவகாரங்களை தேவையற்ற விதத்தில் சர்வதேசமயப்படுத்தல், உள்ளூர் நல்லிணக்க நடவடிக்கைகளை புறம்தள்ளுவதாக மட்டுமே அமைந்துவிடும்.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் இப்போதும் இடம்பெற்று வருகின்றன. மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் ள மக்கள் சமாதானத்தின் அனுகூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையை இலக்கு வைப்பது ஏற்கெனவே துருவமயப்படுத்தப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் அந்நியப்படுத்துவதற்கே வழிகோலும்.
சர்வதேச சமாதானத்திற்கோ பாதுகாப்புக்கோ அல்லது தனது பிரஜைகளின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லாத நிலையில் இலங்கையை இலக்கு வைத்தல் நியாயமற்றதாகும். அத்துடன், இலங்கையை மையப்படுத்தி தெரிவு செய்து இந்த விதத்தில் செயல்படுதல், கேள்விக்குரிய விடயமாகும். இலங்கை எப்போதுமே ஐ.நா. முறைமையுடனும் சர்வதேச சமூகத்துடனும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது.
இந்நிலையில் அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் இலங்கை அரசாங்கத்திற்கு நல்லிணக்கம் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக வழங்குவது தொடர்பான அறிக்கையானது 19/2 தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அமர்வில் ஆராயப்படவுள்ளது.
உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் கருத்துகளும் அவதானங்களும் இணையத்தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையின் நிலைவரம் தொடர்பாக இச்சபையை பிரநிதித்துவப்படுத்தும் பிராந்திய மற்றும் பிராந்திய மட்டத்திலான குழுக்களுடனும் நாங்கள் கிரமமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
எமது சவால்கள் தொடர்பான விடயங்களில் நாம் பெற்ற வெற்றிகள் குறித்து வெளிப்படையாக இருந்துள்ளோம். எமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது பொருத்தமற்றதும்
தேவையற்றதும் மனித உரிமைகள் பேரவையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதுமாகவும் அமைந்திருந்தது என்பது எமது அபிப்பிராயமாகும் கொள்கையடிப்படையில் அந்தத் தீர்மானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்திருந்தோம். அத்தீர்மானத்தை உள்ளீர்ப்பதால் எதிர்மறையான விளைவுகளை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
எமது நிராகரிப்பையும் எமது உறுதிப்பாட்டையும் அதாவது இறுதிச் சமாதானத்தை வென்றெடுப்பது தொடர்பான அர்ப்பணிப்பையும் மக்களின் ஸ்திரத்தன்மை, சுபிட்சம் என்பனவற்றையும் பொருட்படுத்தாமல் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாங்கள் அழிவை ஏற்படுத்தும் விடயங்களைக் கொண்ட கொள்கையை விரும்பவில்லை. ஆக்கபூர்வமானதும் திறந்த தன்மை கொண்டதுமான எமது கொள்கையையே தொடர விரும்புகிறோம்.
இந்தப் பேரவையானது பக்கச்சார்பற்ற முறையிலும் குறிக்கோள் தொடர்பான உணர்விலும் விடயங்களை முன்னெடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து இந்தப் பேரவையில் உள்ளவர்கள் பதிவில் எடுத்துக்கொள்ள வேண்டும். எமக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
எமது பணியை பூர்த்தி செய்து கொள்வதில் போதிய காலம் கிட்டும் போது எமது மக்களுக்கும் நாட்டிற்கும் உரியவற்றை எம்மால் வழங்க முடியுமென நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.