ஈரான் ஜனாதிபதித் தேர்தல் இன்று

ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டின் மீது அமெரிக்க பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையின் ஈரான் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்நாட்டு மக்கள் தங்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

ஈரான் நாட்டின் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஜனாதிபதி பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 50.1 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். 

எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்குகளை பெறாத பட்சத்தில், இரண்டாம் முறை வாக்கு பதிவு நடைபெறும். இன்று நடைபெறும் ஓட்டுப்பதிவின் முடிவுகள் நாளை (சனிக்கிழமை) வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகிறது. ஈரான் ஜனாதிபதி முகமத் அகமதிநிஜாத் தற்போது இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியைவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது