ஐஸ்கீறிம் உரிமையாளர்கள் மீது அநீதியான நடவடிக்கை: தவராசா

ஐஸ்கீறிம் உரிமையாளர்கள் மீது அநீதியான நடவடிக்கை: தவராசா
யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். 
 
அத்துடன், இது தொடர்பில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றையும் தவசராசா, வடமாகாண சபையில் நேற்று புதன்கிழமை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
 
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. இதன்போதே தவராசா, மேற்படி பிரேரணையை சபையில் கொண்டு வந்தார். இந்நிலையில், இந்த பிரேரணை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
 
இந்த கவனயீர்ப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே தவராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 
 
'யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் அண்மையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஐஸ்கிறீம்கள் தயாரிக்கும் நீரில் மலத்தொற்று ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
 
மாகாண சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த 9பேர் கொண்ட விசேட குழுவினர் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 59 ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களை மூடினார்கள். 
 
இதனால், ஐஸ்கிறீம் தொழிற்சாலைகளை சார்ந்த 3,000பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை வடமாகாண அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இந்த சோதனை நடவடிக்கையில் தொழிற்சாலை அமைந்துள்ள இடங்களில் கறைகள் காணப்பட்டதாகவும், கூரை ஒழுக்காக இருந்ததாகவும், இயந்திரக் கோளாறுகள் இருந்ததாகவும் காரணம் கூறினார்கள். தவிர மலத்தொற்று என்று அவர்கள் உற்பத்தியாளர்களுக்கு கூறவில்லை. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் மலத்தொற்று என செய்திகள் வெளியாகின. 
 
இவர்கள் ஏன் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களை மட்டும் சோதனை செய்தார்கள்? யாழ்ப்பாணத்தில் எந்த கடைகள் சுகாதாரமான முறையில் செயற்படுகின்றன?. ஐஸ்கிறீம் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்ட அதேநேரம், கொழும்பிலிருந்து ஐஸ்கிறீம் கொண்டுவந்து இங்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் யாழ்ப்பாண ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
 
சுகாதாரத்தை முக்கியம் என்று நினைத்தால் எல்லாக் கடைகளும் மூடப்பட வேண்டும். எனவே வடமாகாண சபை இந்த கடைகளை உடனடியாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.