ஐ.ம.சு.மு.விலிருந்து கமலேந்திரன் நீக்கம்

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்  என சுசில் பிரேம ஜயந்தவினால் கடந்த 6ஆம் திகதி எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்ஷசன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கொலைக் குற்றச்சாட்டப்பட்டு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.