ஓட்டிசுட்டான் ஒட்டுத்தொழிற்சாலையை மீள இயக்க அமைச்சர் துரித நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாம்முறிப்பில் அமைந்துள்ள ஒட்டிசுட்டான் ஒட்டுத்தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் சுற்றுலா விடுதியில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (17) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி கேட்டறிந்து கொண்டார்.

குறிப்பாக முன்னாள் ஊழியர்களது சம்பளம் மற்றும் நஸ்டஈடு தொடர்பாக துறைசார்ந்தோருடன் ஆராய்ந்து கலந்துரையாடி உரிய பதில் பெற்றுத் தரப்படுமென தெரிவித்த அமைச்சர் அவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கும் உங்களதும் நீங்கள்சார்ந்து வாழும் சமூகத்தினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, இங்கு சுதந்திரமான இயல்புச் சூழலை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக இம்மாவட்டத்தின் அபிவிருத்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு மக்களது ஒத்துழைப்பும், ஒத்தாசையும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

கூழாம்முறிப்பிலுள்ள ஒட்டிசுட்டான் ஒட்டுத்தொழிற்சாலையானது 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக செயலிழந்துள்ள நிலையில் அதனை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் மீளஇயக்குவதற்கு விரைவான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இதன்போது பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜெயராஜ் (கிருபன்) ஆகியோர் உடனிருந்தனர்.