கடனாளிகள் ஆவதற்கு நாங்கள் பொறுப்பல்ல ; என்கிறார் மகாலிங்கம்

கடனாளிகள் ஆவதற்கு நாங்கள் பொறுப்பல்ல ; என்கிறார் மகாலிங்கம்

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் திட்ட அளவையின்  படி வீடுகள் கட்டப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் கடனாளிகளாக வேண்டிய அவசியம் இல்லை என யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். 

இவ்வாரம் கஜானாவுக்கு செல்லவுள்ள நிலையில் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதுவர் மகாலிங்கத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் மருதடியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. 

அதன் போது இந்தியன் வீட்டுத் திட்டத்தினால் பயனாளிகள் பலர் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய வீட்டுத்திட்டத்தில் தெரிவாகும் ஒரு பயனாளிக்கு 550 சதுர அடி அளவிலான வீட்டினையே அமைத்துக் கொடுத்து வருகின்றோம். எனினும் பயனாளிகள் தங்களுடைய வீடு அழகாகவும் பெரிதாகவும் இருக்க வேண்டும் என்று எம்மிடம் அனுமதிபெற்று வீடுகளை கட்டி வருகின்றனர். 

அவ்வாறு வீடுகளுக்கு மாபிள் பதிப்பது , வீட்டுக்கு மரவேலைப்பாடுகள் உள்ள கதவுகள் போடுவது என்றவகையில் காணப்படுகின்றது. 

எனினும் இந்திய அரசினால் வீட்டுத்திட்டத்திற்கு என இலங்கை பணமாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. 

அதன்படி 550 சதுர அடி வீட்டினை அமைப்பதற்கு தேவையான செலவீனங்களுக்கு அது போதுமானதாக இருக்கும். எனினும் மேலதிகமான வேலைத்திட்டங்களுக்கு  நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். 

பயனாளிகள் தங்களுடைய பணத்தில் தான் அவற்றை செய்வார்கள். இவ்வாறான சம்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. 

எனினும் நான் முழுமையாக பார்வையிட்ட வீடுகளில் 600 மேற்பட்ட வீடுகள் 750 சதுர அடிக்கு அதிகமாகவே அமையப்பெற்றுள்ளன. 

இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பிரதேசத்திலே வழங்கப்பட்ட இந்தியன் வீட்டுத்திட்ட வீடுகள் மட்டுமே 550 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. 

இதேவேளை, இந்தியாவில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கு 200 சதுர அடியும் இந்தியன் ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகின்றது என்றார்.