கழிவொயில் ஊற்றுவர்களை கண்டுபிடித்து தாருங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடகவியாளரிடம் கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளில், புதிய கட்டடங்கள் மற்றும் முக்கிய நபர்களது வீடுகள் என தற்போது கழிவொயில் வீச்சு அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்த ஒன்று
ஆனாலும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் சிறிகுகநேசன் கழிவொயில் ஊற்றுபவர்களை கண்டுபிடித்துத் தாருங்கள் நாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றோம் என ஊடகவியலாளர்களைப் பார்த்து இன்றை தினம் கேட்டுள்ளார்.
வாராந்த ஊடகவியலாளர் மாநாடு யாழ். பொலிஸ் நிலைய தலைமைக்காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. அதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழில் அதிகரித்தளவில் கழிவொயில் விச்சுக்கலாச்சாரம் மேலோங்கிக் காணப்படுகின்றது. அதன்படி அண்மையில் வலி தெற்கு உடுவில் பிரதேச சபையின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கையில் இன்று இரவு இனந்தெரியாத நபர்களினால் கழிவொயில் வீசப்பட்டிருந்தது.
இதுபோல யாழ். புற்றுநோய் வைத்தியரின் வீட்டின் மீதும் கழிவொயில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு வலி வடக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த பஸ் மீது கழிவொயில் வீசி விசமிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அதுபோல முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற அர்ப்பாட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சாணம் கரைத்து பைகளில் கட்டி வீசப்பட்டது.
ஆனால் இதற்கு உடந்தையானவர்கள் யார் என்பது பொலிஸாருக்கு இதுவரை தெரியவில்லையாம் என யாழ் . சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
அத்துடன் யாழில் நடாத்தப்படும் தமிழ் மக்கள் சார்பிலான ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் தடை உத்தரவுகளையும் வீதியில் இறங்கிப் போராடக் கூடாது என்ற கட்டளையினையும் யாழ். பொலிஸ் பிறப்பிக்கும் போது ஏன் முஸ்லீம்கள் சிங்களவர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் எல்லாவற்றுக்கும் ஆதரவு வழங்குகிறீர்கள் என ஊடகவியலாளர்களினால் அவரிடம் கேள்வி ஒன்றும் எழுப்பப்பட்டு இருந்தது.
அத்துடன் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தின் போது ரயர் எரிப்பதற்கும் அனுமதி உண்டா என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் ரயர் எரிப்பதற்கு அனுமதி இல்லை ஆனால் கொழும்பு புறக் கோட்டையைப் பாருங்கள் யார் வேண்டுமானாலும் தமது கருத்துக்களை முன்வைக்கும் இடமாக அமைந்துள்ளது. அதுபோல யாழிலும் யாரும் தனது கருத்துக்களை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடியும்.
அத்துடன் யாழில் சிங்களவர், முஸ்லீம்கள், தமிழர்கள் ஆகியோரின் ஆர்பாட்டங்களை நடத்துவதற்கான அனுமதியை நான் தான் வழங்கினேன்.
எனினும் ஆர்ப்பாட்டம் நடக்கும் போதுதான் அதன் நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். விதி முறைகளை மீறினால் அதாவது வன்முறைக்கு மாறினால் கலவரம் தான் நடக்கும். என்றார்.
இதேவேளை நேற்றைய தினம் ஐந்து சந்திப்பகுதியில் அமெரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ரயர் எரிப்பு மற்றும் வாகன நெரிசல் என்பன காணப்பட்டது இதே இடத்தில் பொலிஸாரும் இருந்தனர் ஆனால் எதுவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அதே போல ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டம் யாழ் நகரில் நடைபெற்ற போதும் பொலிஸார் பூரண பாதுகாப்பு வழங்கி வாகனங்களை மாற்று வழிகள் ஊடாகப் போக்குவரத்துச் செய்ய அனுமதித்தனர் ஆனால் தமிழ் கட்சிகள் செய்யும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்குமே இவரர்கள் முட்டுக் கட்டை போட்டு வருகின்றனர்.