காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது

காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது
காசோலை மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை கம்பர் மலைப்பகுதியினை சேர்ந்த 59வயதுடைய நபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஸ்.மீடின், சனிக்கிழமை (22) தெரிவித்தார்.
 
கொம்மாந்துறை பகுதியினை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (21) வல்வெட்டித்துறை நகரப்பகுதியில் வைத்து கைது செய்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். 
 
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
 
கொம்மாந்துறை பகுதியினை சேர்ந்த நபரிடம் மேற்படி நபர் 315,000 ரூபாயிற்கு பொருட்களை கொள்வனவு செய்து அத்தொகையில் காசோலையை வழங்கியுள்ளார். எனினும், கொள்வனவு செய்த நபரின் வங்கி கணக்கில் போதிய வைப்புத்தொகை இல்லாத காரணத்தால், காசோலை வங்கியில் இருந்து மீள திரும்பியுள்ளது.
 
காசோலை தொடர்பில் மேற்படி நபரிடம் பாதிக்கப்பட்ட நபர் பல முறை கேட்டும், பொருட்களினை கொள்வனவு செய்தவர் அதற்குரிய தொகையினை வழங்க மறுத்துள்ளார். இது தொடர்பில் குறித்த பணத் தொகையினை பெறமுடியாத நபர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
 
இம் முறைப்பாட்டுகமைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.