காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த விமான நிலையத்தில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. தற்கொலை தாக்குதல் உடை அணிந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். பின்னர் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். 

ராக்கெட் குண்டுகளையும் வீசினர். உடனே, சுதாரித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களும், பொலிசாரும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் திருப்பி சுட்டனர். 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. விமான போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டது. 

இந்த துப்பாக்கி சண்டையில் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த போக்குவரத்து விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. 

இதற்கிடையே, விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். 

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் கூறும் போது, இந்த தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் எங்களின் முஜாகிதீன் அமைப்புதான் இதை நடத்தியது என்றார்.