கிளிநொச்சி இரணை மடு இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாயொருவர் சனிக்கிழமை நண்பகல் பாழடைந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரணைமடு முகாமுக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குச் சென்ற இவ்விரு படையினரும் கிணற்று நீரை அள்ளி இறைத்து விட்டு அதனுள் இறங்கி மீன்பிடித்த போது கிணறு இடிந்து விழுந்ததில் இராணுவ சிப்பாயொருவர் அதனுள் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.
இவருடன் கிணற்றினுள் இறங்கிய மற்ற சிப்பாய் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சுகத் அமரசிங்க (26 வயது) என்ற சிப்பாயே உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவரும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.