குளிர்பானக்கடைகளை சோதனையிட திட்டம்!

பழரசங்களை விற்பனை செய்யும் (கூல் ஸ்பொட்) குளிர்பான கடைகளை சோதனை செய்யும் திட்டமொன்றை சுகாதார அமைச்சு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

இக்கடைகள் தொடர்பாகப் பொதுமக்கள் வழங்கியுள்ள புகார்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்திருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பழரசக் கடைகளில் பழுதடைந்த மற்றும் நசிந்த பழங்கள் பழரசங்களை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பழுதடைந்த மற்றும் நசிந்த பழங்களை உண்ண வேண்டாமென சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவூட்டுகின்றது. பழமொன்று நசிவடையுமாயின் நசிவடைந்த இடத்தில் பக்டிரியா தொற்று ஏற்படும். அத்தொற்று முழு பழத்திற்கும் பரவ முடியும். என்றாலும் நசிவடைந்த பழங்களில் நசிவடைந்த பகுதியை அப்புறப்படுத்தி விட்டு பயன்படுத்தும் பழக்கம் காணப்படுகின்றது. இது உடலாரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

அத்தகைய பழங்களை உட்கொள்ளுவதைத் தவிர்த்துக் கொள்ளுவது அவசியம் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.