கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் இன்னும் தெரிவாகவில்லை: சம்பந்தன்

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை. சேனாதிராசாவை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறுத்துள்ளார்.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை. சேனாதிராசாவை முதன்மை வேட்பாளராகக் களமிறக்குவதென தமிழரசுக் கட்சியின் யாழ். கிளை தீர்மானித்துள்ளது என்று இணையத் தளங்கள் மற்றும் மின்னியல் ஊடகங்கள் நேற்றுச் செய்தி வெளியிட்டன.

ஆனால், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்.

"வடமாகாண சபைத் தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, அதில் கூட்டமைப்புப் போட்டியிடுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அதன் பின்பே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று ஆராயப்படும்'' என்றார் சம்பந்தன்.  

முன்னதாக, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். கிளைக் கூட்டத்தில் மாவை சேனாதிராசாவை முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என எடுக்கப்பட்ட முடிவு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகள் தெரிவித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு உழைத்தவர் என்ற ரீதியிலும் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றக்கூடியவர் என்ற ரீதியிலும் மாவையின் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாக அந்தச் செய்திகள் கூறின.