கேதர்நாத் கோவிலில் மீண்டும் வழிபாடு

மழை, வெள்ளத்தால் சேதம் அடைந்த கேதர்நாத் கோவிலில் எதிர்வரும் 11ம் திகதி முதல் மீண்டும் வழிபாடு நடைபெற இருப்பதாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் விஜய் பகுகுணா தெரிவித்தார். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பு இந்தியாவையே உலுக்கியது. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கேதர்நாத் கோவிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பேய்மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாக இராணுவம் மீட்டது. 

கோதர்நாத் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதுமாக சேதம் அடைந்தது. நிலச்சரிவில் அங்கிருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகியது. இதனையடுத்து கேதர்நாத் கோவிலில் வழிபாடு நிறுத்தப்பட்டது. 

மழை, வெள்ள சேதத்தை தொடர்ந்து கேதர்நாத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் டேராடூனில் கோதர்நாத் கோவிலில் மீண்டும் வழிபாடு நடத்த அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுணா தலைமை தாங்கினார். 

கூட்டத்தில், பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில் கமிட்டி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீண்டும் வழிபாடு தொடங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் விஜய் பகுகுணா கூறியதாவது, 

கேதர்நாத் அதிகாரி மற்றும் சங்கராச்சாரியா சுவாமி சொரூபானந்த சரஸ்வதி ஆகியோர் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

அவர்கள் வருகிற 11ம் திகதி முதல் கேதர்நாத் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்று கூறியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் அதிகஅளவில் சேதம் அடைந்துள்ளது. எனவே, பாதுகாப்பு காரணமாக நடைபயணமாக அங்கு செல்ல 30ம் திகதி வரை தடை விதிக்கப்படுகிறது. 

பக்தர்களின் பாதுகாப்புக்காக 24 பேர் அடங்கிய குழுவை கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. ஒவ்வொரு 10 நாட்களுக்கும் அந்த குழு மாற்றி அமைக்கப்படும். கோவில் கமிட்டியுடன் மீண்டும் 30ம் திகதி ஆலோசனை நடத்தப்படும் என்று விஜய் பகுகுணா கூறினார்.