கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முதலாம் காலாண்டிற்கான மீளாய்வுக் கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கொழும்பு மொறட்டுவவில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (22) மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் முதலாம் காலாண்டுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு கீழான கைத்தொழிற் பேட்டைகள் மற்றும் கைத்தொழில் கிராமங்கள் தொடர்பாகவும் அவற்றின் உட்கட்டுமானங்கள் மற்றும் அவற்றினது அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
உலோகங்கள், தோற்பொருள், பாதணி, கித்துள் உள்ளிட்ட கைத்தொழில் துறைசார்ந்த தொழிற்துறை நடவடிக்கைகள் தொடர்பாகவும் திறைசேரியூடாக கிடைக்கப்பெற்ற 40 மில்லியன் ரூபா நிதியூடாக முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்;.
இதனிடையே கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை நவீனதரத்துடன் முன்னெடுப்பது மற்றும் குறிப்பாக உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் உற்பத்திகளை மேற்கொள்ளுவது, உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்வது, உற்பத்திகளுக்கான தர நிர்ணய சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் பிரியங்க ரட்னமடல்ல, உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.