சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே 188 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் உணரப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் ஒரு நிமிடம் வரை குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 

இதுவரை உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி பேரலை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. 

ஆசியா கண்டத்தில் 2,30000 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.