சொலமன் தீவு நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்களில் சுனாமி

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சொலமோன் தீவுகளில் இன்று காலை (புதன்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சொலமோன் தீவு கூட்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கிரா கிரா தீவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பசிபிப் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ., உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சொலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

சாலமோன் தீவுகளில் இருக்கும் டெமோடோ மாகாணத்தில் லாடா எனும் இடத்தில் சுனாமி தாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. 

கடந்த 2007ம் ஆண்டு, சொலமோன் தீவுகளில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியால் 50 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயினர். 13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது.