தகவல் தந்தால் மாத்திரமே கைதுசெய்ய முடியும் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

 

"யாழ்ப்பாணத்தில் ஆயுதக் குழுக்கள் எங்கு இருக்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அது தொடர்பில் தகவல் கிடைத்தால் மட்டுமே நாம் அவர்களைக் கைது செய்ய முடியும்''

 
இவ்வாறு நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார் யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்றி.
 
இரவு ரோந்து
 
நேற்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இரவில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று பொலிஸ் உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இப்போது போர் இல்லை. பொலிஸாரிடமும், படையினரிடமும் மட்டுமே துப்பாக்கிகள் உள்ளன. வேறு எவரும் இங்கு ஆயுதம் வைத்திருக்க முடியாது. நிலைமை இவ்வாறு இருக்க கடந்த சனிக்கிழமை "உதயன்' காரியாலயத்துக்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள் சூடு நடத்தியதுடன் அச்சு இயந்திரத்துக்கும் தீ வைத்து விட்டு இலகுவாகத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். 
 
இது அவர்களால் எப்படி சாத்தியமானது என ஊடகவியலாளர்கள் நேற்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கூட்டாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெப்றி, 
 
தகவல் தாருங்கள்
 "யாழ்ப்பாணத்தில் ஆயுதக் குழுக்கள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றித் தகவல் கிடைத்தால் மாத்திரமே அவர்களைக் கைது செய்ய முடியும். 
 
"உதயன்' தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம் என்று பதிலளித்தார்.