தனது சொத்து மதிப்பை குறைத்து வெளியிட்ட பத்திரிகை மீது சவுதி இளவரசர் வழக்கு

தனது சொத்து மதிப்பை குறைத்து வெளியிட்ட போர்ப்ஸ் பத்திரிகை மீது சவுதி இளவரசர் வழங்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சொத்து மதிப்பின்படி உலகில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. 

அதில் சவுதி இளவரசரான அல்வலீத் பின் தலாலின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர் என்று வெளியிட்டு அவருக்கு 26-வது இடத்தைக் கொடுத்திருந்தது. 

சவுதி இளவரசரின் ´கிங்டம் ஹோல்டிங்க்ஸ்´ என்ற நிதி நிறுவனம் ஆப்பிள், பேஸ்புக், டுவிட்டர், ரூபர்ட் முர்தோச் செய்தி நிறுவனம் போன்றவற்றின் பங்குகளை நிர்வாகம் செய்கிறது. 

மேலும், சவாய் ஹோட்டல்கள், நியூயார்க்கில் வணிக வளாகம், நான்கு பருவங்களுக்கும் உரிய சங்கிலித் தொடர் ஹோட்டல்கள், லண்டனில் உள்ள கேனரி வார்ப் வணிக வளாகத்தில் பங்குகள் போன்று பல நாடுகளிலும் வேரூன்றி உள்ளது. 

இந்தநிலையில், தன்னுடைய சொத்து மதிப்பு 29.6 பில்லியன் டொலர்கள் எனவும், அதனைக் குறைத்து மதிப்பிடாமல் இருந்திருந்தால், தான் முதல் பத்து இடத்திற்குள் வந்திருக்கலாம் என்றும் இளவரசர் கருதுகிறார். 

மேலும், இவ்வாறு அவரது சொத்து மதிப்பினைக் குறைத்துக் கூறியுள்ளது தனக்கும், தன்னுடைய நிறுவனத்திற்கும் இருந்த நற்பெயரைக் குறைத்துள்ளது என்றும் அவர் நினைக்கிறார். 

கடந்த மார்ச் மாதம், சண்டே டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், மத்தியக் கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்களையும், முதலீட்டு நிறுவனங்களையும் குறைவாக மதிப்பிட்டு, தவறான தகவலை போர்ப்ஸ் பத்திரிகை அளித்துள்ளது என்று இளவரசர் அல்வலீத் குறை கூறியிருந்தார். 

இதனால் போர்ப்ஸ் பத்திரிகையின் இரண்டு செய்தியாளர்கள், பத்திரிகை வெளியீட்டாளர் ரண்டால் லேன் ஆகியோர் மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக ´கார்டியன்´ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இளவரசரின் கோரிக்கைகள் வியப்பை அளிக்கின்றது என்று பத்திரிகையின் தகவல் அதிகாரி தெரிவித்தார். பிரிட்டனில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட அவதூறு சட்ட சீர்திருத்தத்தினால், இளவரசர் லண்டனில் வழக்கைத் தாக்கல் செய்திருக்கக்கூடும்.

ஆனால், போர்ப்ஸ் பத்திரிகை தனக்குக் கிடைக்கும் தகவலின்படி செயல்படுகின்றது என்பதை அவர்களும் ஒப்புக்கொள்ளுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.