யாழ் கைதடியில் நேற்று நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
வடமாகாண சபையின் முதலாவது அமர்வு நேற்று வெ ள்ளிக்கிழமை சபையின் தவிசாளர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சிவாஜிலிங்கம் கூறியதாவது
1983ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னரே இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து
இந்தியா எங்களுக்கு உதவிகளைச் செய்தது. இதனை இலங்கை அரசும் மறந்துவிடமுடியாது. ஆயுதப்போரட்டம்
மிகவும் உக்கிரமாக நடந்த கட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்திய
இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.
அந்த வடக்கு கிழக்கு இணைப்பானது நிரந்தரமாக காணப்படும் என முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி உறுதியளித்திருந்தார் அதனை இந்தியா பார்த்துக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் புலிகள் ஓர் அரசாங்கத்தை வடக்குக் கிழக்கில் நிறுவிருந்தார்கள். அந்த வகையில் ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் உதவிகளை வழங்கியது. இந்நிலையில் எமக்கான தீர்வைப் பெறுவதற்கு நாம் தற்போது சர்வதேச சமூகத்தின் உதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தங்களை தாமே ஆழ்வதற்கு உரிமையுடையவர்கள். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக போராடி வருகிறது.
உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் தீர்வை கோரிநிற்கின்றோம். இதனை அரசாங்கம் தரவேண்டும். அத்துடன் சர்வதேச நீதி விசாரணையும் தேவையாகும். இந்த இரண்டு விடயங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்காது போனால் உலகத்தில் உதாரணத்திற்கு எடுப்பதற்கு பல நாடுகள் உள்ளன. இதனை இலங்கை அரசாங்கம் மறக்கக் கூடாது. எனவே ஒரே நாட்டுக்குள் தீர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இதற்கு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் உதவியாக இருக்க வேண்டும்.போரின் போது நமக்கு உதவாத அரசாங்கம் சர்வதேசம் இன்று எமக்கு ஆதரவாக உருவெடுத்துள்ளது. இந்த ஆதரவை நாங்கள் ராஜதந்திர முறையில் நகர்த்தி உரிமைகளை வென்றெடுப்போம். தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்றார்.