தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; பிரேரணை நிறைவேற்றம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; பிரேரணை நிறைவேற்றம்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை வலியுறுத்தும் பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
வடமாகாண சபையின் 19ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் புதன்கிழமை (19) இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண அவைத்தலைவர் இந்த பிரேரணையை சபைக்கு கொண்டுவந்தார்.
 
பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய அவைத் தலைவர், 'யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்த நிலையில், 8 வருடங்களுக்கும் மேற்பட்ட காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல அரசியல் கைதிகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக சிறைகளில் இருக்கின்றனர். அரசியல் கைதிகளை மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும்' என கோருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து,
 
'கடந்த ஜனவரி மாதம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்திருந்தேன். தங்களுக்கான சட்ட ஆலோசனைகள், சட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு சட்டத்தரணிகள் தயாராகவில்லை என கைதிகள் என்னிடம் கூறினார்கள். தங்களுக்கு சட்டரீதியான விடயங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கைதிகள் கூறினர்.
 
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி ஜனவரி மாதம் ஜனாதிபதியிடமும் கோரியிருந்தேன். அவர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இருந்தும் இதுவரையில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 
 
சட்டமா அதிபரிடமும் கோரிக்கை விடுத்த போது, யாரை விடுக்க முடியுமோ அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இருந்தும், அவர் இதுவரையில் யாரை விடுவித்தார் என்பது தொடர்பில் தெரியவில்லை. இந்நிலையில் இந்த பிரேரணையை கொண்டு வருவது பொருத்தமுடையதாக இருக்கும்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.
 
ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கருத்து, 
 
'கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மாவட்ட ரீதியில் கைதிகளின் உறவினர்களிடம் தரவுகள் சேகரிக்க வேண்டும். அதற்கான அறிவித்தலை பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்தி உறவினர்கள், தரவுகள் கொடுப்பதற்கு முன்வர வைக்கவேண்டும்' என்றார்.
 
இதன்போது குறுக்கிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை கூறுகையில்,
 
'கைதிகளின் தரவுகளை சேகரிக்க முன்னர் கைதிகளின் குடும்பங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அந்த குடும்பங்கள் எவ்வித ஆதரவுகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய முன்வரவேண்டும்' என குறிப்பிட்டார்.
 
ஆளுங்கட்சி உறுப்பினர் சூசைரட்ணம் பிரிமுஸ்சிராய்வா கருத்துக்கூறுகையில், 
 
'புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னால் விடுதலைப்புலிகள் போராளிகள் தற்போது உயிர் பாதுகாப்பின்றி வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் கூட மன்னார் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி போராளியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், எத்தனை பேர் மீது புலி முத்திரை குத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவார்கள், எத்தனை பேருக்கு புலி முத்திரை குத்தப்படப்போகின்றது என்பது தொடர்பில் தெரியவில்லை' என்றார்.
 
மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்து
 
அரசியல் கைதிகள் தொடர்பில் தரவுகள் சேகரிக்கும் போது வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் தரவுகள் சேகரிக்க வேண்டும். ஏனெனில், வடக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் உறவினர்கள் கிழக்கிலும் வசிக்கின்றனர்' என்றார்.
 
எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கருத்து
 
கிழக்கில் மட்டுமல்ல மலையகத்திலும் தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அங்கும் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் உறவினர்கள் வாழ்ந்து வருவதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டார்.