தமிழ் சிவில் சமூக அமையம் உதயம்

தமிழ் சிவில் சமூக அமையம் உதயம்
தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் அமைப்பு கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 
 
இந்த தமிழ் சிவில் சமூக அமையமானது இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இணைக்கும் ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இதன் தலைவராகவும், அழைப்பாளராக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பும், இணை செயலாளர்களாக பொ.ந.சிங்கம், தியாகராஜன் ராஜன் ஆகியோரும், பேச்சாளர்களாக குமாரவடிவேல் குருபரன், எழில் ராஜன் ஆகியோரும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
அடையாளப்படுத்தப்படாத, புல்லுருவிகளாக செயற்படும் சிலர் தமிழ் சிவில் சமூகம் என்ற பெயரில் இதுவரை காலமும் இயங்கி வந்தனர். அவர்கள் தமிழ் மக்கள் சார்பாக இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டபோதும், தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக்கொணரவில்லை. 
 
இவற்றை தடுக்கும் நோக்கில் இந்த தமிழ் சிவில் அமையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் மற்றும் தூதுவர்களுடன் கலந்துரையாடலை நடத்தும். மேலும் அறிக்கைகளையும் வெளியிடும். 
 
இந்த அமையம் உருவாக்கப்பட்டு, மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு மாவட்ட ரீதியில் இணைப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 
 
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு இணைப்பாளர்களும், வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வெளியேயுள்ள மாவட்டங்களுக்கு ஒரு இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
மாவட்ட ரீதியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இந்த அமைப்பின் மூலம் செயற்படுத்தப்படும் என குருபரன் கூறினார். 
 
தொடர்ந்து உரையாற்றிய குருபரன், தமிழ் அரசியல் தலைமைகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றியடைவதில்லையென்பது வரலாற்று ரீதியிலான பாடம் என தெரிவித்தார்.
 
தமிழ் அரசியல் தலைமைகள் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர், சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் என்ற நோக்கில் சிங்கள மக்கள் அவருக்கு வாக்குகள் போடமாட்டார்கள். இதனால், எதிர்த்து போட்டியிடுபவர் வெற்றிபெறுவார். இது வரலாற்று ரீதியில் கண்ட உண்மை.
 
யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராது. இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்க்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று யாரும் இல்லை.
 
இலங்கையின் தலைமைகள் மாறுவதால் தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக நாங்கள் தலைமை மாறுவதற்கு எதிரானவர்களும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.