தவறிய கைபேசியைக் கையளிக்க முயன்றவருக்கு ஏற்பட்ட அவமானம்; யாழ். பெண்ணின் காட்டுமிராண்டித்தனம்

வீதியில் தவறவிடப்பட்டிருந்த கைத்தொலைபேசியைக் கண்டெடுத்தார் பெரியவர். அதனை உரியவரிடம் கையளிக்க முயன்ற அவருக்கு ஏற்பட்டது பெரும் அவமானம்.

இந்தச்சம்பவம் நடந்தது யாழ் நகரில். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் ஓர் இளம் பெண். அவரின் அநாகரிகச் செயல் இதனை வாசித்தால் தெரியும்.

சம்பவம் இதுதான்:
பெரியவர் ஒருவர் அவரது தனிப்பட்ட விடயமாக காரைநகருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியில் காரைநகர் பாலத்தில் வீதியில் அநாதரவாகக் கிடந்தது ஒரு பை. அதனை எடுத்தார். அதில் கைத்தொலைபேசியுடன் சில ஆவணங்களும் இருந்தன.

அவரது பயணம் தொடர்ந்தது. ஒரு சில நிமிட நேரத்தில் கண்டெடுத்த தொலைபேசி அலறத் தொடங்கியது. பெரியவர் அதனை கையில் எடுத்துப் பேசத் தொடங்கினார்.
தொலைபேசிக்குரியவர் எனக் கூறி பெண் ஒருவர் பேசினார்.

"நீங்கள் எடுத்த அந்தப் பையில் கைத்தொலைபேசியுடன் முக்கிய ஆவணங்களும் உள்ளன. உடனடியாக அந்தப் பையை ஒப்படைத்துவிட வேண்டும்" என்று அதிகாரத் தொனியில் கட்டளையிட்டார்.

"அம்மா நான் யாழ். நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். குறித்த எனது முகவரிக்கு வந்து கைபேசியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" பெரியவர் பவ்வியமாகக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேச விடாமல் தடுத்த அந்தப் பெண் "உடனடியாகப் பையை ஒப்படைத்துவிடும் இல்லாவிட்டால் நடப்பது வேறு" என்று முழங்கித் தள்ளினார்.
பெரியவர் அதிர்ந்து போனார். "உதவி செய்யப் போய், இது என்ன வம்பு" என்று தன்னை நொந்து கொண்டார் அவர்.

அவரது பயணம் தொடர்ந்தது. வீடு வந்து சேர்ந்தார். நடந்த புதினத்தை வீட்டாரிடம் மனவேதனையுடன் கூறினார். "சரி அதற்கென்ன அவர்கள் வந்தவுடன் கொடுப்போம்" மனைவி, பிள்ளைகள் ஆறுதல் கூறினர்.

சில மணி நேரத்தில் மீண்டும் ஒலித்தது அந்தத் தொலைபேசி. "நீங்கள் கூறிய முகவரிக்கு அருகில் வந்து நிற்கிறேன். கைத்தொலைபேசியை எடுத்து வையுங்கள், வருகிறேன்" என்று அந்தப் பெண் கூறினார்.

"பொழுது சாய்ந்து விட்டது நாளை காலையில் வா பிள்ளை" என்றார் பெரியவர். சீறினார் அந்தப் பெண். "நீங்கள் சொல்லும் நேரத்துக்கு வரமுடியாது. அதற்கு எனக்கு நேரம் இல்லை. இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன்" என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டார். கவலையுடன் காத்திருந்தனர் வீட்டார். நீண்ட நேரம் காத்திருந்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

வீட்டின் முன்னால் நவீன ரக கார் மற்றும் ஒரு ஓட்டோவும் சினிமாப் பாணியில் வந்து பெரும் சத்தத்துடன் "பிறேக்' போட்டு நின்றன. இளைஞர்கள் சிலர் தடிகள், பொல்லுகள், இரும்புக் கம்பிகளுடன் குதித்தனர்.

"எங்கே தொலைபேசி? முன்னர் கதைத்தது யார்? என்று கூச்சல் போட்டனர். இந்த இரவு வேளையில் பெண் றோட்டில் திரிவதா எதற்காக அவரை அழைக்கிறீர்கள்...?" எனக் கத்தத் தொடங்கினர்.

பதிலளிக்க முற்பட்ட வீட்டு இளைஞரை நிலத்தில் தள்ளி விழுத்திய அந்த கோஷ்டி "எல்லோரையும் வெட்டிச் சாய்த்து விடுவேன்" என்றான் அவர்களில் ஒருவன்.
ஒரு சில நிமிடங்கள் நீடித்த இந்த அடாவடித்தனத்தை அடுத்து தொலைபேசியைப் பறித்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது அந்தக் கும்பல். பெரியவரும் வீட்டாரும் அதிர்ந்து போய் விட்டனர்.