திபெத்திய பௌத்த துறவி நேபாளத்தில் தீக்குளிப்பு

திபெத்திய பௌத்த துறவி நேபாளத்தில் தீக்குளிப்பு

திபெத்திய பௌத்த துறவி ஒருவர் நேபாளத்தில் வைத்து தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

திபெத்தில் சீனாவின் அதிகாரத்தை ஏற்க மறுத்து வரும் திபெத்தியர்கள், தலாய் லாமா மீண்டும் திபெத்திற்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக, பௌத்த துறவிகள் பலர் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். 

மேலும் திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக போராட்டம் நடத்தி வரும் பௌத்த மதத்தினர் பலர் நேபாளத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோர், பௌத்த மடங்கள் நிறைந்த பவுத்தநாத்தில் வசிக்கின்றனர். இந்தநிலையில் நேற்று காத்மண்டுவின் வடக்கு பகுதியில் உள்ள புத்தர் கோவிலுக்கு வென்ற கர்மா நெய்டான் கியால்ட்சோ (வயது 39) என்ற துறவி, திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். 

உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. 

இதனால் பௌத்த மடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. திபெத்தின் டாம்ஷங் பகுதியைச் சேர்ந்த கர்மா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காத்மண்டுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.