தேர்தல் திகதியை நானே தீர்மானிப்பேன்; தேர்தல்கள் ஆணையாளர்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய  மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதியை நானே தீர்மானப்பேன் பெரும்பாலும் இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் 21 இன்றேல் 28 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

இந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படல் வேண்டுமென்று அரசாங்கத்தினால் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் செப்ரெம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கூடுதலாக கிடைத்தால் தேர்தலை நடத்துவதற்கு காலம் தேவைப்படும். ஒரேயொரு வேட்புமனுக்கிடைத்தால் பிரச்சினையில்லை. 

  வடக்கு தேர்தலை நடத்துவதற்கு 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய இருமாகாணங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.   

வடக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படல் வேண்டும். ஏனைய இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் தொடர்பில் அந்த மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவிக்கவேண்டும்.

அவ்வாறான அறிவிப்புகள் விடுக்கப்பட்ட 60 க்கும் 80 க்கும் இடைப்பட்ட நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.