நான் அழகான பொண்ணோட டூயட் பாடுறது யாருக்கும் பொறுக்கல : வடிவேலு குமுறல்

ஒரு அழகான கதாநாயகியுடன், நான் டூயட் பாடினா இங்குள்ள பல கதாநாயகர்களுக்கு பொறுக்கவில்லை, என்று குமுறியுள்ளார் வடிவேலு. 

இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். 

அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். 

ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், 

"அந்தப் புள்ளை தாங்க முதலில் கதாநாயகியா நடிக்க ஒப்பந்தமாச்சு. அப்புறம் என்னாச்சின்னே தெரியல... அது நடிக்கல. 

அப்புறம்தான் தெரியுது... ஒருத்தன் ரெண்டு பேருல்லண்ணே... ஒரு கூட்டமே போய் அந்த புள்ள மனசை கலைச்சிருக்காய்ங்கன்னு... 

வடிவேலுவுக்கெல்லாம் ஜோடியா நடிக்கிறீங்களே... உங்க எதிர்காலம் அவ்ளோதான்னெல்லாம் பயமுறுத்தி இருக்காணுங்க... இருக்கட்டும்ணே... இதையெல்லாம் ஏற்கனவே பாத்ததுதானே...", என்றார்.