நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
நீர் நிலைகளுக்கு நீராடச் செல்பவர்கள் மற்றும் படகுச் சவாரியில் ஈடுபடுபவர்களும் குறிப்பாக இக்கால கட்டத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் நிலையத்தின் பேச்சாளர் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.
களுகங்கை, நில்வளாகங்கை ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்து வரும் நிலையில் அதனை அண்டிய ஏனைய நீர் நிலைகளின் நீர் மட்டங்களும் உயர்வடைய வாய்ப்பிருப்பதனால் நீர் நிலைகளுக்கு நீராடச் செல்வதனை தவிர்த்துக்கொள்வது சிறந்ததெனவும் அவர் கூறினார்.
மேலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோர் அவதானத்துடன் இருக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குக்குளே கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்தமையையடுத்து அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.