நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தவிருந்த மீன் பிடிக்கான பாஸ் நடைமுறை நீக்கம்

நெடுந்தீவில் கடற் படையினரால் மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  முயற்சியின் பயனாக உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

பாஸ் அனுமதி பெற்றுக் கொண்டதன் பின்னரே கடற் தொழிலில் ஈடுபட வேண்டும் என நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கடற் படையினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்ட கலந்துரையாடலின் போது பணிப்புரை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான பாஸ் நடைமுறையால் தாம் எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாகவும், நீக்கப்பட்டிருந்த பாஸ் நடைமுறையை கடற்படையினர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தாம் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது விடயம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கடற் படை அதிகாரிகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.