பங்களாதேஷில் 8 வக்கீல்கள் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தூக்கு

பங்களாதேஷில் கடந்த 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் எட்டு வக்கீல்கள் கொல்லப்பட்டமை குறித்த வழக்கில் 10 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

இந்தநிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமிய குழுக்கள் மீது மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதனால் கடந்த சில மாதங்களாக பங்களாதேஷ் முஸ்லிம் குழுக்கள் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை வலியுறுத்தி காசிபூர் பார் ஆசோசியன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் 8 வக்கீல்கள் கொல்லப்பட்டனர். 80 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஜே.எம்.பி. இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. 

இதில் ஜே.எம்.பி. இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். 

மேலும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இயக்கத்தின் தலைவனான பங்களா பாய் என்று அழைக்கப்படும் சித்திக் உல் இஸ்லாம் என்பவன் பல தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.