பத்திரிகைகளில் அவதூறு - வாடிகன் புகார்!

போப் பெனடிக்ட் இம்மாதம் 28- ம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபை குறித்து, பத்திரிகைகள் வதந்திகளை பரப்பி வருவதாக, வாடிகன் புகார் கூறியுள்ளது. 

16வது போப்பாக இருக்கும் பெனடிக்ட்டின் இந்த பதவி விலகும் முடிவு, பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. போப்பின் இந்த முடிவு குறித்து, இத்தாலிய பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 

இதுகுறித்து, வாடிகன் அதிகாரி பெடரிக்கோ லொபர்டியோ கூறியதாவது... 

போப் பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து, பத்திரிகைகள் அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்த வதந்திகள், திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்ததால் தான், போப் பதவி விலக தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், "லா ரிப்பப்ளிக்´ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள் கூறியுள்ளன. வாடிகனில் உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன. "புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டும்´ என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. 

இவ்வாறு, பெடரிக்கோ லொபர்டியோ கூறியுள்ளார்.