பலூன் பயணங்கள் எகிப்தில் இடைநிறுத்தம்

 எகிப்தின்  லக்ஸர் சம்பவத்தையடுத்து, பலூன் விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பலூன் விமானம் தீப்பற்றி எரிந்ததில் 19 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலியாகியிருந்தனர். 

இதில் ஹொங்கொங், யப்பான், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரஜைகளே பலியாகியிருந்தனர்.

தரையிலிருந்து 1000 அடி உயரத்தில் பலூனில் ஹீலியம் எரிவாயு குழாய் வெடித்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதன்போது, பலூனைச் செலுத்தி வந்தவரும் இன்னொரு பயணியும் பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பலூன் விமானச் சேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என எகிப்திய அதிகார சபை தெரிவித்துள்ளது.

எகிப்தின் மிகப் பிரபல்யமான பரானோனிக் யுக அழிவுகளுக்கும் நைல் நதிக்கரைக்கும் அருகிலுள்ள லக்ஸர் நகரிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லக்ஸர் நகரின் ஹர்னக் கோயில் மற்றும் அரசர்களின் கல்லறை உட்பட பிரபல்யமான பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூடான வாயுவில் இயங்கும் பலூன்களில் கொண்டு சென்று காண்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.