பாகிஸ்தானில் மசூதி, மதரசா மீது தற்கொலை தாக்குதல் : 14 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி மற்றும் மதரசா மீது இன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் ஷியா பிரிவினர்கள் அதிகம் வசிக்கும் குல்ஷான் காலனியில் மசூதியும் மதரசாவும் அமைந்துள்ளது. 

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 200 பேர் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் மத போதகரின் உபதேசங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது மசூதிக்குள் பின் வழியாக வந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தான். 

இதில் அந்த மசூதியின் கதவு ஜன்னல்கள் சேதமடைந்தன. அதன் கூரை முற்றிலும் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த பிரிவினைவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பாகிஸ்தானிஸ், 20 சதவீதத்தினர் மட்டுமே ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.