பெண் இராணுவத்தை மீண்டும் போர்க்களத்தில் இறக்குகிறது அமெரிக்கா

பெண்கள் போர் முனையில் நின்று யுத்தம் யுரிய இருந்த தடையை நீக்க அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் முடிவெடுத்துள்ளது. 

போர் முனைகளில் பெண்கள் நின்று சண்டையிடக் கூடாது என்று கடந்த 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லியோன் பெனெட்டா கூறியதாவது:- 

இராணுவத்தின் ஒரு அங்கமாக பெண் வீராங்கனைகள் இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக போரில் பங்கேற்று தங்களது திறமையை அவர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். 

நாட்டை பாதுகாக்க பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் ஈடு இணையற்ற சேவைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவான ஒன்றே. 

இந்த தடை நீக்கத்தின் மூலம் சவால் நிறைந்த கமாண்டோ பணிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. இந்த தடை நீக்கமானது வரும் 2016-ம் ஆண்டு வரை நீடிக்கும். இதுகுறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கடந்த 11 வருடங்களில் ஈராக் மற்றும் ஆப்கான் போரில் 3,00,000 பெண் வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 84 பெண் ராணுவ வீராங்கனைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம உரிமை, பதவி, நாட்டுக்காக சேவையாற்றுதல் ஆகியவற்றில் ஆண்களை போன்று இராணுவ வீராங்கனைகளும் மதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகிலேயே தலைசிறந்த அமெரிக்க இராணுவத்தில் பெண் வீராங்கனைகளுக்கு வழங்கப்படவுள்ள சமவாய்ப்பு வரவேற்க கூடியது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.