போதைப்பொருள் விவகாரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் விவகாரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 மீனவர்களில் 5 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதைப்போன்று, இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நேற்று வியாழக்கிழமை (20), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தது. 
 
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மூவரும் இந்திய மீனவர்கள் ஐவரும் என மொத்தமாக 8 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது. இவர்களில், இந்திய மீனவர்கள் ஐவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், இலங்கை மீனவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படவில்லை.
 
இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி, யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மனுவொன்றையும் கையளித்தனர். 
 
அவ்வேளையில், அமைச்சர் யாழ்ப்பாண அலுவலகத்தில்  இல்லாத காரணத்தால் அந்த மனுவை வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டின் அலன்டின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
மனுவை பெற்றுக்கொண்ட கருத்து தெரிவித்த தவராசா, 'இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யக்கோருவது நியாயமான கோரிக்கை. இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் ஊடாக ஜனாதிபதியிடம் கதைத்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' எனக் கூறினார்.
 
இதனையடுத்து, ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ' 'இது தொடர்பில் புதன்கிழமை (19) மாலை ஜனாதிபதியுடன் கதைத்துள்ளேன். இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார். மினவர்களின் விடுதலையை வலியுறுத்தும் கடிதமொன்றில் பாதிக்கப்பட்டவர்களின் கையெழுத்து சேகரித்து எதிர்வரும் சனிக்கிழமை (22) தன்னிடம் நேரடியாக கொண்டு வந்து தருமாறு' கூறினார். 
 
மண்டைதீவைச் சேர்ந்த கிறிஸ்துராசா கில்மெட்ராஜ் (வயது 25), குருநகரைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்டியன் (வயது 38) மற்றும் ஞானப்பிரகாசம் துசாந்தன் (வயது 28) ஆகிய மூன்று இலங்கை மீனவர்களுமே இவ்வாறு மரண தண்டினை விதிக்கப்பட்டவர்களாவர்.