மண்டைதீவுக்கு மின்சாரம் எப்போது கிடைக்கும்?; பணிகள் முடிந்தும் காத்திருப்பு எதற்கு என்கின்றனர் மக்கள்

மண்டைதீவுக்கான மின்விநியோகம் எப்போது கிடைக்கும் என்று கூறமுடியாது என மின்சார சபை ஊழியர்கள் அங்குள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மண்டைதீவு மக்கள் விசனம் தெரிவித்தனர். மண்டைதீவுக்கான மின்விநியோகம் வழங்கக்கூடியதாக மின்சார இணைப்பு வேலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எனினும் மின் விநியோகம் ஆரம்பிப்பது தாமதமாகிறது. இதுவரை சுமார் ஐம்பதுக்கும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளுக்கு மின் இணைப்புக்கள் வழங்கக் கூடியதாக தமது வேலைகளைப் பூர்த்தி செய்து அதற்கான விண்ணப்பங்களையும் சபையிடம் கையளித்துள்ளனர். தொடர்ந்தும் மின்சார இணைப்புக் கோரி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தண்ணீர் அருகில் இருந்த போது தாகத்தைத் தீர்க்க முடியாத நிலையாக நாம் உள்ளோம் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அரசியல்வாதிகள் வரும் வரை நாம் இருளில் மூழ்கிக் கிடக்க வேண்டியது தான் என்கிறார்கள் அந்த மக்கள்.