மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய கணவனுக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 10,000 ரூபா அபராதமும் விதித்து யாழ். மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
இந்த அபராதத்தைக் மேற்படி நபர் கட்டத் தவறின் 6 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், சுதுமலை காவக்கட்டுப் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மேற்படி நபர் தனது மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி எரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மானிப்பாய் பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் 2006ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளி சார்பில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, கே.எஸ்.வரதராஜா, சிவநேசன் ஆகியோர் ஆஜராகினர். வழக்குத் தொடுநர் சார்பில் அரசாங்க சட்டத்தரணி நளினி கந்தசாமி ஆஜராகினார்.
மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவனுக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
