மிரட்டும் மிரட்டல் விமர்சனம்

மிரட்டும் மிரட்டல் விமர்சனம்

விஜயகாந்த், அஜீத், விஜய் போன்றவர்களுக்கெல்லாம் தமிழ் அகராதியிலேயே பிடிக்காத கெட்ட வார்த்தைகள் இருப்பது மாதிரி, எனக்கு தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே பிடிக்காத கெட்ட வார்த்தைகள் ‘கதை, திரைக்கதை.
 

‘இல்லாததை இருப்பது போல் காட்டும் உனக்குத்தான் எத்தனை வீறாப்பு?’ என்று ஒரு பிரா’பலக்  கவிஞர் எழுதியது போல, பெரும்பாலான படங்களில் அப்படி என்று ஒன்றே இல்லாதபோது, கதை இலாகா, கதை விவாதக்குழுக்கள் இடம்பெற்று, கடைசியில் டைரக்டர் பெயர் போடும்போது சற்றும் மனசாட்சியை சட்டை செய்யாது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று போட்டுக்கொள்வதால், தமிழ் சினிமா டைட்டில் கார்டுகளிலேயே எனக்குப் பிடிக்காத கெட்டவார்த்தைகள் கதை, திரைக்கதை.
இதுகுறித்து விவாதிக்க எங்கேயோ போவானேன்? நம்ம இயக்குனர் மாதேஷின் ‘மிரட்டல்’ க்கே வருவோம்.
‘உங்கள் தங்கம் உங்கள் உரிமை’ என்று மிரட்டுகிற போதே, நம் வீட்டுக்குழந்தைகளை பக்கத்து வீடுகளுக்கு ஓடிப்போய் பம்ம வைக்கிற பிரபு, ஒரு பிரபல தாதா. வில்லன் பிரதீப் ராவத் இன்னொரு ஏரியா தாதா.
சாதா மனிதர்களுக்கென்று தொழில் தர்மம் ஏதாவது இருக்கிறதோ இல்லையோ, இந்த தாதா மனிதர்களுக்கு தொழில் தர்மம் முக்கியம். ஏரியா விட்டு ஏரியா வந்து பிசினஸ் பண்ணினால் இவர்களுக்கு பிடிப்பதில்லை.
அப்படி ஏரியா விட்டு யூரியா விற்க வந்த பிரபுவின் அடியாளை பிரதீப்பின் மகன் போட்டுத்தள்ள, உடனே சூட்டோடு சூடாக பிரதீப்பின் மகனை பிரபு போட்டுத்தள்ளுகிறார்.
பாச மகனைப்பறிகொடுத்து ஆ வேச நிலைக்கு ஆளாகும் ராவத், பிரபுவைப் பழிக்குப் பழி வாங்க அவரது செல்ல தங்கையைப்போட ஸாரி போட்டுத்தள்ள நினைக்கிறார்.
என்னதான் சமூகத்துக்கு வில்லனாக இருந்தாலும், சொந்தத் தங்கையின் மீது உயிரை வைக்கவேண்டிய தமிழ்சினிமா இலக்கணப்படி, தங்கை ஷர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பிரபு, ஒரு அண்ணனின் கடமையாக தங்கையைக் காக்கும் பொறுப்பை தனது அடியாளான விநய்யிடம் ஒப்படைக்க, டைரக்டரின் திரைக்கதை உத்தியால் அது மாமா வேலைபோல் மாற, விநய்யும், ஷர்மிளாவும் பிரபுசெய்த ஏற்பாட்டாலேயே காதல் வசப்படுகிறார்கள்.
அப்புறம் என்ன, சீனுக்கு சீன் பூச்சுற்றல் அதிகமாகி, ஓவர் வாசனை உடம்புக்கு ஆகாமல் போகிறது.
மேற்படி கதையில்’ ‘கதை’ என்ற ஒன்று எங்கே இருந்தது? என்ற கேள்வியுடன் படத்தின் கதைச்சுருக்கத்தை முடித்துவிட்டு மற்ற சமாச்சாரங்களுக்குப் போவோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறபு, தோற்றத்தில் மிடுக்காக இருந்தாலும், தாதா என்ற போர்வையில், விநயிடமும், தங்கை ஊர்மிளாவிடமும் அநியாயத்துக்கு ஏமாறும் பரிதாதாவாக இருக்கிறார்.
‘உன்னாலே உன்னாலே’ மாதிரி மென்மையான காதல் கதைகளில் நடித்து தன்னாலே வளர்ந்திருக்கவேண்டிய விநய், இதுபோன்ற மொன்னையான ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்கு மார்க்கெட் டல்லான பின்னாலே யோசிக்கவேண்டியது வரும்.
அறிமுக நாயகி ஊர்மிளா, விநய்க்கு அக்கா மாதிரியே இருக்கிறார். அவ்வப்போது சில ஃப்ரேம்களில் அவர் அழகாக தெரிகிறபோது அவரது ஒப்பணையாளர்கள் கற்பனையில் வந்துபோகிறார்கள்.
படம் முழுக்க காமெடியில் கலக்குகிறார் என்று சொல்லப்பட்ட சந்தானம், சாரி என்ற கேரக்டரில் ரொம்பவும் ஸாரி பண்ணுகிறார். இன்னொரு பக்கம் கஞ்சா கருப்பு செமகடுப்பு.
படத்தின் அத்தனை பாடல்களும் தம்மடிக்க எழுந்து ஓடல்கள் என்ற நிலையில் இருக்க, பின்னணி இசையில் பிரித்துமேய்ந்து விட்டார் பிரவீண் மணி என்று எழுத ஆசையாக இருக்கிறது. நிறைய ரீ-ரெகார்டிங் சி.டி. மார்க்கெட்ல மலிவு விலைக்கு கிடைக்குது. ப்ளீஸ் எதாவது ஒரு படத்துலயாவது ட்ரை பண்ணுங்க மணி.
படத்தின் ஒரே ஆறுதல் டி. கண்ணனின் ரம்மியமான ஒளிப்பதிவு. எவன் எக்கேடுகெட்டா எனக்கென்ன என்று நினைத்து தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.
படத்தில் மிகவும் ஹைலைட்டான ஒரு விஷயம்,  கதைப்படி முரட்டுப்பிடிதாதாக்காரரான பிரபு, ஏதாவது ஒரு பிரச்சைனையில் ‘ஃபைனல்’ என்ற ஒரு வார்தையை சொல்லிவிட்டால், அடுத்து அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். கைவசம் கோலிசோடா வைத்துக்கொண்டு பார்க்கவேண்டிய ரணகள காமெடி.
அப்படியே டைரக்டர் மாதேஷைப் பார்த்து, ‘’ தம்பி நீ இதுவரைக்கும் நாலு படம் இயக்கியாச்சி. இனியும் நாடு தாங்காது. ஆகவே இது உனக்கு ’ஃபைனல்’ என்று பிரபு சொன்னால் ஜனங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
‘மிரட்டல்’  ஜனங்களை திரையரங்கை விட்டு விரட்டல்.