மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்துச் சிதறியது

மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷ்ய ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. 

ரஷ்யாவின் புரோடோன்-எம் என்ற ராக்கெட் கசகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூர் ஏவு தளத்தில் இருந்து இன்று காலை ஏவப்பட்டது. 

3 வழிகாட்டு செயற்கை கோள்களை தாங்கிச் சென்ற இந்த ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கிளம்பிய ஒரு சில நொடிகளிலேயே பெரும் சப்தத்துடன் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது. 

என்ஞ்சினில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. 

இதனால், 500 டன் அளவிலான விஷத்தன்மையுடைய ராக்கெட் எரிபொருள் ஏவு தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிதறியது. இதன் காரணமாக பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

இதை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 24 செயற்கைக் கோள்களை கொண்ட ரஷ்யாவுக்கான பிரத்தியேக வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. 

இந்த அமைப்பில் மேலும் மூன்று செயற்கைக் கோள்களை நிறுவுவதற்காக 3 செயற்கைக் கோள்களையும் இந்த ராக்கெட் தாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரஷ்யாவுக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே 2007 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் ரஷ்யா அனுப்பிய ராக்கெட்டுகளும் வெடித்துச் சிதறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.