யாழில் இந்தி தினம் - தமிழர்களை சிங்களம் கற்குமாறு இந்திய துணைத் தூதர் வலியுறுத்தல்

யாழில் இந்தி தினம் - தமிழர்களை சிங்களம் கற்குமாறு இந்திய துணைத் தூதர் வலியுறுத்தல்
யாழ்.இந்திய துணைத்தூதரகத்தினால் இந்தி தினம் கடந்த 14ம் திகதி கொண்டாடப்பட்டது. இதற்கான நிகழ்வு யாழ். இந்திய தூதரக வளாகத்தில் நடைபெற்றன. 
 
இந்தி மொழியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இந்தி தினம் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களினால் ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 14ம் திகதி கொண்டாடப்படுவது வழக்கம். 
 
அதற்கமையவே யாழ். துணைத்தூதரகத்திலும் கொண்டாடப்பட்டது.  இதன்போது இந்தி மொழியை கற்று வெளியேறிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்களது திறமையினை வெளிப்படுத்தும் வகையில் பாட்டு, கவிதை என்பனவும் இடம்பெற்றன.
 
மேலும் கவிதை, கட்டுரை, வாசிப்பு ஆகிய போட்டிகள்  நடாத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தி மொழியை கற்று வெளியேறும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதேவேளை, இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான இந்தியை கற்றிருப்பதைப்  போல வடமாகாண மக்களும் சிங்களத்தை கற்க வேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதுவர் எஸ்.டி.மூர்த்தி அங்கு தெரிவித்தார்.