ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய வடமாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதியை இன்றைய தினம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தகாலத்திற்குப் பின்னர் யாழ்.மாவட்டத்திலுள்ள இப் போதனா வைத்தியசாலை நவீன வசதி வாய்ப்புகளை உள்ளடக்கியவாறு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் இம்மாவட்டத்தின் சுகாதார மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி வரும் ஜனாதிபதி அவர்களுக்கு எனது அமைச்சின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2011 ம் ஆண்டு இம் மருத்துவமனையில் 100 வைத்தியர்கள் மட்டுமே கடமைபுரிந்து வந்துள்ள நிலையில், 2013 ம் ஆண்டு 400 வைத்தியர்கள் கடமை புரிந்து வருகின்றனர். குறிப்பாக தென் மாகாணத்திற்கு மேலாக வடமாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கான செயற்திட்டங்கள் பல நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிவிருத்திகளை ஏற்றுக் கொள்ள முடியாத புலம்பெயர் மக்கள் இங்கு எவ்விதமான அபிவிருத்திப் பணிகளும் அரசினால் முன்னெடுக்கப்படவில்லையெனக் கூறிவருகின்றார்கள்.
எனவே அவ்வாறு சொல்பவர்கள் இங்கு வருகை தந்து, நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது, யாழ். போதனா மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைக்கப்படுவதனூடாக யாழ்.மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வடமாகாண மக்களுக்குத் தேவையான, அவசர சிகிச்சைகளை வழங்க முடியும்.
அந்தவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையின் கீழ் ஜப்பான் அரசு இப்புதிய கட்டிடத் தொகுதியை அமைத்துத் தந்துள்ள நிலையில், ஜனாதிபதி அவர்களுக்கும், ஜப்பானிய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது இம்மருத்துவமனை நாட்டின் முதற்தர மருத்துவமனையாக உருவாகி வருகிறது என்றும் எமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.