யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் நின்றவர்களை அலைபேசியில் படம் பிடித்த நபர், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜாவால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி நபர் தனது அலைபேசியில் நோயாளர்களையும், நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மேற்படி நபரை பிடிக்க முற்பட்ட வேளை அந்நபர் தப்பித்து ஓட முயன்றுள்ளார்.
ஓடிய நபரைத் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அந்நபரை பிரதிப் பணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர். இதன்போது, மேற்படி நபர் தனது கைத்தொலைபேசியை தானாகவே உடைத்துள்ளார்.
மேற்படி நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிரதிப்பணிப்பாளர், கடுமையாக எச்சரிக்கை செய்து மேற்படி நபரை விடுவித்துள்ளார்.