மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு ரிசானாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசானாவின் மரண செய்தியை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவரது உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் ரிசானாவின் உறவினர் அப்துல் ஜிஹாத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் ரிசான நஃபீக்கின் உடலை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுவதாக சவுதிக்கான இலங்கைத் தூதர் அகமது ஜாவேத் தெரிவித்தார்.
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இலங்கைத் தூதரகத்துக்கு எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், ஊடகங்கள் மூலமே தாங்களும் அறிந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரிசானாவின் உடலை இலங்கைத் தூதரகத்திடம் தருமாறு சவுதி அதிகாரிகளிடம் முன்னுதாரணமற்ற வகையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா அவர் கூறுகிறார்.
அதே நேரம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா என்பதும் தமக்கு தெரியாது எனவும் அவர் கூறுகிறார்.
அவரை காப்பாற்ற இலங்கை அரசும் தூதரகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
இது அடிப்படையற்றது–சவுதி நடைமுறை குறித்த புரிதல் இல்லாமல் கூறப்படுகிறது என்றார் இலங்கைத் தூதர்.
சவுதியில் இப்படியான வழக்குகள் வரும் போது அரச தரப்பு வழக்கறிஞர்களும் – காவல்துறையும் முன்வைக்கும் ஆதாரங்களை நீதிபதி ஆராய்வார்கள் என்றும் குற்றம் சாட்ப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஷரியா சட்டத்தின்படி மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அரசருக்கு கிடையாது என்றாலும் நல்லிணக்கப்பாட்டை கொண்டுவரக் கூடிய அதிகாரம் இருப்பதால் அதைச் செய்ய அரச குடும்பத்தினர் மூலம் முயற்சி எடுக்கப்பட்டதாகவும் தூதர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க இலங்கையில் இருந்து வந்த மூன்று தூதுக் குழுக்கள் முயன்ற போதிலும், அக்குடும்பத்தினர் தம்முடன் பேச மறுத்துவிட்டனர் எனவும் அகமது ஜாவேத் கூறுகிறார்.
ரிசான நஃபீக்குக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து சவுதிக்கான இலங்கைத் தூதர் திரும்ப அழைக்கப்படுவதாக வந்த செய்திகளை மறுத்து அகமது ஜாவித் தனது மூன்று ஆண்டுகால பணிக்காலம் டிசம்பர் 9 ஆம் திகதியே முடிந்து விட்டதால் இது வழக்கமான ஒரு மாற்றல் எனவும் கூறுகிறார்.