வட மாகாணத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் கடந்த ஆறு நாட்களில் 2236 பேர் பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளனர்.
கபே இயக்கம், இலங்கை மனித உரிமைகள் கேந்திரம், வட மாகாண அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்பில் இந்த நடமாடும் சேவை இடம்பெறுகிறது.
கிளிநொச்சி, வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
கடந்த 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதிவரை கிளிநொச்சி – கரச்சி பிரதேச செயலாளர் வலயத்திற்குள் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் 1584 பேர் பிறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பித்ததுடன், ஜூலை 16 தொடக்கம் 18வரை யாழ். மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் இதுவரை 649 பேர் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பிறப்பு அத்தாட்சி பத்திரம் இன்றி இப்பிரதேசங்களில் பலர் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தப்படாததால் இந்நிலை தோன்றியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிறப்புச் சான்றிழ் இன்றி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாதிருந்த இம்மக்களுக்கு இதுவரை காலமும் வாக்குரிமையும் இல்லாதிருந்ததாக கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதனால் இத்திட்டத்தை எதிர்காலத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.