வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க மாநாடு

வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க மாநாடு
வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க மாநாடு சனிக்கிழமை காலை 11 மணிக்கு வடமாகாண கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் வ.சிவகுமார் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
இந்த மாநாட்டில் வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கத்தினர் 3 கோரிக்கைகளை முன்வைத்தனர். 
 
முதலாவது கோரிக்கையாக கூட்டுறவு ஊழியருக்கு நீண்டகாலமாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையால் தமது வாழ்வாதாரத்தினைக் கொண்டுநடத்த பெரிதும் கஷ்டப்படுவதால் கூட்டுறவு ஊழியர்களின் அடிப்படைச்சம்பளத்தினை 50 வீதமாக அதிகரித்து வழங்கவேண்டும். 
 
இரண்டாவது கோரிக்கையாக கூட்டுறவு நிறுவனங்களை இன்று வரை மக்களுக்கு சேவையாற்ற நிலைத்திருக்க செய்யும் பணியில் கணிசமான அளவு பணிகளை ஆற்றுபவர்கள் கூட்டுறவு ஊழியர்களே! இவ் ஊழியர்களுக்கு இன்று வரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையில் பணிகளை ஆற்றி வருகின்றனர். எனவே அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்குவதற்கு உரியவர்களூடாக ஆவண செய்ய வேண்டும்.
 
மூன்றாவது கோரிக்கையாக கூட்டுறவு ஊழியர்கள் பலவிதமான காலங்களில் மக்களுக்கு குறைந்த சம்பளத்துடன் நிறைவான சேவைகளை வழங்கியுள்ளனர். இவர்கள் தமது ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ கூட்டுறவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.
 
இந்த மூன்று விதமான கோரிக்கைகளையும் செயற்படுத்தி தருமாறு வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்க தலைவர் முன்மொழிந்தும் சகல கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள்; வழிமொழிந்தும் கூட்டுறவு தொடர்பான அதிகாரிகளிடத்தில் கோரிக்கையை சமர்ப்பித்தனர்.
 
இந் மாநாட்டில் கூட்டுறவு இணைப்பாளரும், வடமாகாணசபை உறுப்பினருமாகிய கே.சயந்தன் உரையாற்றுகையில்,
 
கூட்டுறவு பாதாளத்திற்குள் சிக்கியுள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டும். பணியாளர்கள் அரசியல்வாதிகள் கூட்டுறவு அடிப்படையான ஜனநாயக கட்டமைப்பு. கூட்டுறவாளர்கள் எல்லோருக்கும் அரசியல் சார்பு இருக்கின்றன. 
 
ஆனால் கூட்டுறவுக்கு உள்ளே அரசியலை கொண்டுவருவதை கூட்டுறவாளர்களாகிய நீங்கள் அனுமதிக்க கூடாது. உங்கள் கோரிக்கைகளை  ஒரு தீர்மானமாக கொண்டுவந்துள்ளீர்கள். உங்களுடைய பங்களிப்பு தேவை. நிச்சயமாக வடமாகாணசபை இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தும். கூட்டுறவு தொழிலாளர் ஆணைக்குழுவையும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடத்திலும் மாகாண கூட்டுறவு அமைச்சரையும் அத்துடன் தொழிலாளர் சார்பில் உங்கள் பிரதிநிதித்துவத்தையும் கூட்டுறவாளர்கள் பிரதிநிதித்துவத்தையும் உடனடியாக ஏற்படுத்தி எதிர்வரும் தை மாதத்திற்குள்; இதற்கான தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்தார்.
 
வட மாகாண கூட்டுறவுஅபிவிருத்தி ஆணையாளர் வ.மதுமதி உரையாற்றுகையில், 
 
பல காலமாக நான்  எதிர்பார்த்த கூட்டுறவை இன்று கொண்டுவந்துள்ளீர்கள். கேட்க வேண்டிய விடயங்களை இவ்வாறு ஒற்றுமையான செயற்பாட்டின் மூலம் கேட்கும் போது நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் பொழுதுதான் எமது திணைக்களம் அபிவிருத்தியடையும். வடமாகாணத்திலுள்ள 114 கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை நான் வழங்குவேன் என்று தெரிவித்தார்.
 
வடமாகாண உதவித்தொழில் ஆணையாளர் ஜெ.மீனலோயினி உரையாற்றுகையில்,
 
கூட்டுறவு ஊழியர்களுடைய நியமனம் நிரந்தரமாக்கப்படாமையால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நாளாந்த பணியாளர்களுக்கு விடுமுறைகள் சம்பளம் அற்ற விடுமுறைகளாக இருக்கின்றது. இந்த கோரிக்கைகளை சிறந்த முறையில் பரிசீலித்து வழங்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தும் வரை அனைத்து ஊழியர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படவேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் எஸ். தவராசா உரையாற்றுகையில்,
 
கூட்டுறவு ஆதாயம், பொருளாதாரத்துடன் சேர்ந்து சமூக நோக்கோடு செயற்படுகின்றது. வடமாகாண சபையில் பிரேரணைகளை மட்டும் கொண்டு வந்து எதையும் சாதிக்க முடியாது. கூட்டுறவு  13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு கீழ் முழுமையாக மாகாணங்களுக்கு கீழ் உள்ள விடயம். ஆனால் நீங்கள் தெரிவு செய்தவர்கள் இந்த ஒருவருட காலமும் இதை செயற்படுத்தவில்லை.  
 
சட்டத்தை உருவாக்க வேண்டும். கூட்டுறவுத்துறையை நெறிப்படுத்த வேண்டும். அதிகாரம் இல்லை என்று அனைத்து இடங்களிலும் சொல்லித் திரிவதை விட  இருக்கின்ற அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். வடமாகாணசபையில் ஆணையாளர் இருந்தும் அவரை நிர்வகிப்பதற்கும் அவர் நிர்வகிப்பதற்கும் இன்றுவரை எந்த சட்ட ஏற்பாடும் இல்லை. அத்துடன் அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் கூட்டுறவு சங்கங்களை நெறிப்படுத்த முடியும். என்று தெரிவித்தார். 
 
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், 
 
முதலமைச்சருடன் இணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பியிருந்தேன். ஏனெனில் கூட்டுறவு மாகாணசபையின் அதிகாரங்களுக்கு உட்பட்டது. முதலமைச்சருடைய பிரதிநிதிகளும் இங்கு வந்துள்ளார்கள். அவர்களுடைய பேச்சுக்கள் இணக்கமாகதாக இருக்கின்றது. இக் கோரிக்கைகள் நியாயமானது. எனவே மத்திய அரசினுடைய உதவியை நிச்சயம் பெற்றுத்தருவேன். அனைவரும் ஒன்று சேர்ந்தபடியால் இக் கோரிக்கைகளுக்கான செயற்பாடுகள்  விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்று தெரிவித்தார். 
 
இந்த மாநாட்டில் விருந்தினர்களாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கூட்டுறவு இணைப்பாளரும், வடமாகாணசபை உறுப்பினருமாகிய கே.சயந்தன், வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம், வட மாகாண கூட்டுறவுஅபிவிருத்தி ஆணையாளர் வ.மதுமதி, வடமாகாண உதவித்தொழில் ஆணையாளர் ஜெ.மீனலோயினி, வடமாகாண கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.