யாழ் மாவட்டத்தில் வருடாந்தம் புதிதாக ஐயாயிரம் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகளுடன் கூடிய பிரிவு வட மாகாணத்தில் இல்லாததால் அவர்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்ல நேரிடுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் புதிதாக புற்றுநோய் சிகிச்சை பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்காக நிதி திரட்டும் வகையில் சுகாதார அமைச்சு, தெற்கிலிருந்து வடக்கு வரையான நடைபவனியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்மூலம் 180 மில்லியன் ரூபா நிதி திரப்பட்டதாகவும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 30 மில்லியன் ரூபா கிடைத்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
260 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வைத்தியசாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சரிடம் நேற்று 100 மில்லியன் ரூபாவுக்கான காசோலை கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் 20 ஆயிரம் புற்றுநோயாளர்கள் புதிதாக இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு நோயளர்களுக்கான சிகிச்சைகளுக்காக அரசாங்கம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை வருடாந்தம் செலவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது