வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதி அவர்களும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அரும்பாடுபட்டு வருகின்றார்கள் - ஆளுநர்

வடக்கின் வசந்தம் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் நியமனங்களைப் பெறும் வடமாகாண சிற்றூழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்மையாக உழைக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்;;டபத்தில் இன்றைய தினம் (14) இடம்பெற்ற வடமாகாண கல்விசாரா விவசாய மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏழு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் பின்னர் நேர்முகத் தேர்விற்கு தோற்றியதன் அடிப்படையில் இந்நியமனங்களை வழங்கி வைக்கின்றோம். 

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக வடமாகாணத்தில் 6,600 நியமனங்களை வழங்கியுள்ளோம்.

தொடர்ந்தும் ஜனாதிபதி அவர்களது தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரது வழிகாட்டலுக்கு அமைவாகவும் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே வடபகுதியின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிதாக நியமனங்களைப் பெற்றுக் கொள்பவர்கள் உள்ளடங்கலாக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டோருக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. 

எதிர்கால சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தொடர்ந்தும் அரும்பாடுபட்டு வருகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்நாள் அமைந்துள்ளது என்றும் இதனூடாக உங்களுக்கும் நீங்கள் சார்ந்து வாழும் சமூகத்திற்கும் பயன்பெறும் வகையில் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதுடன், அனைவருக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1317 கல்விசாரா, விவசாய, சுகாதார தொழிலாளர்களுக்கு இந் நியமனப் பத்திரங்களை அமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட துறைசார்ந்தோர் வழங்கிவைத்தனர்.  

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), மாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ்,  ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.  

இதன்போது மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலர் சத்தியசீலன். மாகாண சுகாதார அமைச்சின் செயலர் ரவீந்திரன்,  மாகாண கால்நடை மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலர் ஹால்டின், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தெய்வேந்திரம்;, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.