கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் நீ தானே என் பொன்வசந்தம் படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், கவுதம் மேனனின் அடுத்த படம் தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித், விஜய், சூர்யா என தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் பலருடன் பேசினார் கவுதம் வாசுதேவ் மேனன்.
ஆனால் அஜித், சூர்யா, விஜய் ஆகிய மூவருடனும் இணையாமல் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படம் இயக்குகிறார்.
அஜித், சூர்யா, விஜய் ஆகியோருடன் இணையாததற்கான காரணம் பற்றி கேட்ட போது கவுதம் மேனன் “அஜித்திடம் நான் கூறிய துப்பறியும் ஆனந்த் படம் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டிய படம். பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதால் திரைக்கதை வலுவாக இருக்க கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அஜித்திற்கு காத்திருக்க விருப்பமில்லாததால் துப்பறியும் ஆனந்த் கைவிடப்பட்டது.
விஜய்க்கு கூறிய கதை ஹாலிவுட் நிகரான ஆக்ஷன்பேக் கதை என்பதால் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்க நினைத்தேன். ஆனால் விஜய் ஹாலிவுட் ஸ்டைல் வேண்டாம் என்றும், அவருக்கு ஏற்றது போல மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார். கதையை மாற்ற விருப்பமில்லாததால் யோஹானும் டிராப் ஆனது.
சூர்யாவிடம் கூறிய கதை அவருக்கு பிடித்திருந்தது.நாங்கள் இருவரும் இணைவது உறுதி ஆனால் இப்போது இல்லை. அடுத்த வருடம் சூர்யா நடிக்கும் படம் துவங்கப்படும். சூர்யாவிற்கு ஏற்ற லவ் ஸ்டோரி என்பதால் அவரும் ஆர்வமாக உள்ளார். கதை அவருக்காகவே எழுதியது.சூர்யாவிடம் அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டேன்” என்று கூறினார்.